தமிழ் இலக்கணம் அறிவோம் .

 தமிழ் இலக்கணம்

               ஒருவர் தம் கருத்தை வெளியிடவும், அதைக் கேட்போர் புரிந்து கொள்ளவும் கருவியாக அமைவது மொழி. அம்மொழியைப் பிழையின்றிப் பேசவும் எழுதவும் துணை செய்வது இலக்கணம் ஆகும்


தமிழ் இலக்கணம் ஐந்து வகைப்படும். 

அவை 

எழுத்திலக்கணம்

சொல்லிலக்கணம், 

பொருளிலிக்கணம், 

யாப்பிலக்கணம், 

அணியிலக்கணம்

                              என்பனவாகும்


எழுத்து -


எழுத்து இலக்கணம்

                         தமிழ் எழுத்துகளின் எண், பெயர் , முறை, பிறப்பு, உருவம், மாத்திரை முதல், ஈறு, இடைநிலை, போலி, பதம், புணர்ப்பு எனும் பன்னிரு பகுதிகளையும் விளக்கிக் கூறுவது எழுத்து இலக்கணம் ஆகும்


எழுத்துகளின் வகைகள்


முதலெழுத்துகள்


உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் (அ... ஔ) மெய்யெழுத்துகள் பதினெட்டும் (க். .ன்) ஆகிய முப்பது எழுத்துகளும் மொழிக்கு முதன்மையான எழுத்துகளாகும். இவையே பிற எழுத்துகள் பிறப்பதற்கு அடிப்படைக் காரணமாகவும் உள்ளன ஆதலால் இம் முப்பது எழுத்துகளையும் முதலெழுத்துகள் என்பர்.


"உயிரும் உடம்புமாம் முப்பதும் முதலே"         - நன்னூல் 59


சார்பெழுத்துகள்

முதல் எழுத்துகளாகிய உயிர் எழுத்துகளையும் மெய்யெழுத்துகளையும் சார்ந்து இயங்கும் எழுத்துகள் சார்பெழுத்துகள் எனப்படும்

இச்சார்பெழுத்துகளைப் பத்து வகைகளாகப் பகுப்பர். அவை, உயிர்மெய் ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக் குறுக்கம், ஒளகாரக் குறுக்கம், மகரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம் என்பனவாகும்.


Post a Comment

0 Comments