எழுத்துகளின் பிறப்பு

 எழுத்துகளின் பிறப்பு


எழுத்துகள் தோன்றுவதற்கு அடிப்படைக் காரணமாயிருப்பவை ஒலியணுக்களே ஆகும். அவை உயிரின் முயற்சியால், உடம்பினுள் இருக்கும் காற்றினால் எழுப்பப்படுகின்றன. அவ்வொலி அணுக்கள் பல சேர்ந்து உண்டாவது ஒலி எழுத்தாகும். இவ்வொலியே செவியில் நமக்குப் புலனாகின்றது

தமிழ் எழுத்துகளுள் சில மார்பினின்றும், சில கழுத்தினின்றும், சில தலையினின்றும், சில மூக்கினின்றும் பிறக்கின்றன. இவ்வாறு எல்லா எழுத்துகளும் இந்நான்கு இடங்களிலிருந்தே பிறந்தாலும், அவை 

                 உதடு நாக்கு, பல், அண்ணம் (மேல்வாய்) ஆகிய நான்கு உறுப்புகளின் தொழில் வேறுபாட்டால் வெவ்வேறு எழுத்துகளாக வேறுபட்ட ஒலியுடன் தோன்றுகின்றன


நிறையுயிர் முயற்சியின் உள்வளி துரப்ப எழுமனுத் திரள்உரம் கண்டம் உச்சி முக்குற்று இதழ்நாப் பல்லணத் தொழிலின் வெவ்வேறு எழுத்தொலி யாய்வரல் பிறப்பே.  

- நன்னூல் 74


இடப்பிறப்பு, முயற்சிப் பிறப்பு

தமிழ் எழுத்துகள் முதலெழுத்து, சார்பெழுத்து என இருவகைப்படும் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவ்வெழுத்துகளின் பிறப்பை இடப் பிறப்பு, முயற்சிப் பிறப்பு என இரு வகையாகப் பிரிக்கலாம். 

எழுத்து தோன்றுகின்ற மார்பு முதலானவற்றை இடப் பிறப்பு என்றும், உதடு முதலிய உறுப்புகளின் தொழில் வேறுபாட்டினால் ஒலிப்பதை முயற்சிப் பிறப்பு என்றும் கூறுவர்

உயிரெழுத்துகள் பன்னிரண்டும், மெய்யெழுத்துகள் பதினெட்டும் முதலெழுத்துகள் ஆகும். 

மெய்யெழுத்துகளை ஒலிக்கும்போது மூன்றுவித வேறுபாட்டொலிகளை நாம் கேட்க இயலும், அவை வலித்தலோசை மெலித்தலோசை, இடைப்பட்ட ஓசை என்பனவாகும். அவ்வோசைகள் உண்டாவதற்கு, அவ்வெழுத்துகள் பிறக்குமிடங்கள் வேறுபடுகின்றன


Post a Comment

0 Comments