மனோன்மணீயம்


நாடகத்தமிழ் நூல்களுள் தலையாய சிறப்பினையுடையதாக விளங்குவது மனோன்மணியம், நாடகக் காப்பியங்களால் சிறப்புப் பெற்று விளங்கும் வடமொழிக்கு ஈடாக நடிப்புச் செய்வியும் இலக்கியச் செவ்வியும் ஒருங்கே அமையப் பெற்றது. இந்நாடகம் லிட்டன் பிரபு என்பார் ஆங்கிலத்தில் எழுதிய இரகசிய" வழி என்ற நூலைத் தழுவி அமைந்தது. எனினும் இது வழிநூல் என்னாது முதல் நூல் எனவே கொள்ளப்பெறும் சீர்மையுடையது. பெருங்காப்பிய நூல்களுக்குரிய இயற்கை வண்ணனை, கற்பனையெழில், தத்துவச் செறிவு, உலகியல் உண்மை முதலிய கருத்துகள் அமைய எழுதப் பெற்றிருப்பினும் செய்யுள் நடையில் மிடுக்குடனும் நாடகத்தன்மைக்கேற்ற உரையாடற் சிறப்புகளுடனும் இந்நூல் தன்னிகரற்று விளங்குகிறது


அங்கங்களையும் காட்சிகளையும் அமைத்து எழுதுவது நாடக நன்னூல் மரபு. இந்நாடகம் ஐந்து அங்கங்களையும் இருபது காட்சிகளையும் கொண்டு விளங்குகிறது. இடையே சிவகாமி சரிதம் என்னும் துணைக் கதை ஒன்றும் இடம் பெற்றுள்ளது. இந்நாடகத்தைத் தமிழன்னைக்கு இயற்றியளித்தவர், பேராசிரியர் பெ. சுந்தரம்பிள்ளை ஆவார். இவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆலப்புழை என்னும் ஊரிற் பிறந்தார். தந்தை பெருமாள் பிள்ளை, தாய்- மாடத்தி அம்மையார். இவர் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள் என்பவரைத் தமது ஞானாசிரியராகக் கொண்டு ஒழுகி வந்தார். 

இவர் காலம் 1897 (19 ஆம் நூற்றாண்டு 

இவரியற்றிய பிற நூல்கள் : நூல் தொகை விளக்கம், திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி திருவிதாங்கூர்ப் பண்டை மன்னர் கால ஆராய்ச்சி என்பன. 

அந்நாளைய சென்னை மாகாண அரசு இவருக்கு ராவ்பகதூர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. தமிழ்நாடு அரசு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் என்னும் பெயரில் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவிப் பெருமைப்படுத்தியுள்ளது. 

இவரது நீராருங்கடலுடுத்த என்ற தமிழ் வாழ்த்துப்பாடலே தமிழக அரசின் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments