உயிரளபெடை

 உயிரளபெடை


புலவர்கள் தாம் இயற்றும் செய்யுளில் ஓசை குறையும்போது, அவ்விடத்திலுள்ள எழுத்தோடு அதன் இன எழுத்தைச் சேர்த்து, ஓசையை நிறைவு செய்வர். இதற்கு அளபெடை என்பது பெயர். இருக்கும் அளவைக் காட்டிலும் மிகுந்து ஒலிக்கச் செய்வது என்பது இதன் பொருள்.


உயிரெழுத்தைக் கொண்டு ஓசையை நிறைவு செய்தால், அதனை உயிரளபெடை என்பர். மெய்யெழுத்தைக் கொண்டு நிறைவு செய்வதை ஒற்றளபெடை என்பர். (ஒற்றெழுத்து- மெய்யெழுத்து)


உயிரளபெடை மூவகைப்படும்: 

செய்யுளிசை அளபெடை, 

இன்னிசை அளபெடை, 

சொல்லிசை அளபெடை.


செய்யுளிசை அளபெடை


"ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும் வாரி வளங்குன்றிக் கால்".


இக்குறட்பாவில் 'உழாஅர்' எனும் சொல் அளபெடுத்து வந்துள்ளது. உழார் என்பது இயல்பான சொல். இது செய்யுளின் இடையில் ஓரசையாகி ஓசை குறைந்து நிற்கின்றது. இதனை நிறைவு செய்ய, சொல்லின் இடையில் உள்ள ஆ என்னும் உயிரெழுத்து (ழ்+ஆ=ழா) தனக்குரிய இரண்டு மாத்திரையின் மிகுந்து ஒலிக்கின்றது இதற்கு அடையாளமாக இவ்வெழுத்தின் இனமான 'அ' எனும் குறிலெழுத்து அருகில் அமைந்துள்ளது

இவ்வாறு செய்யுளில் ஓசையை நிறைவு செய்தற் பொருட்டு, சொல்லின் முதல், இடை, கடையிலுள்ள உயிர்நெடில் எழுத்துகள் அளபெடுத்து வருவதைச் செய்யுளிசை அளபெடை என்பர், இதை இசைநிறை அளபெடை என்றும் வழங்குவர்


ஓஓதல் வேண்டும்   -  சொல்லின் முதலில் அளபெடை வந்துள்ளது


தொழாஅள்  - சொல்லின் இடையில் அளபெடுத்துள்ளது


நடுவொரீடு  - சொல்லின் இறுதியில் அளபெடுத்து உள்ளது


(குறிப்பு: செய்யுளிசை அளபெடையில், அளபெடுத்த பின்னரே செய்யுளின் யாப்பிலக்கணம் பிழையின்றி அமையும்.)


இன்னிசை அளபெடை


"கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை."


இக்குறட்பாவில் உள்ள 'கெடுப்பதூஉம்', 'எடுப்பதூஉம்' என்னும் சொற்கள் அளபெடுத்து வந்துள்ளவையாகும். கெடுப்பதும், எடுப்பதும் என்பன இயல்பான சொற்கள். இவற்றால் செய்யுளின் ஓசை குறையவில்லை. இருப்பினும் இவை 'கெடுப்பதூம் 'எடுப்பதூம்' எனக் குறில் நெடிலாகி, அவை மேலும் அளபெடுத்து 'கெடுப்பதூஉம் எடுப்பதூஉம்' என்றாயின. செவிக்கு இனிய ஓசையைத் தரும் பொருட்டு 'து' எனும் குறில் 'தூ' என்று நெடிலாகி 'தூஉ ' என அளபெடுத்துள்ளது


இவ்வாறு செய்யுளில் ஓசை குறையாத பொழுதும், செவிக்கு இனிய ஓசையைத் தரும் பொருட்டு உயிர்க் குறில் நெடிலாகி மேலும் அளபெடுப்பது இன்னிசை அளபெடை எனப்படும்


(குறிப்பு: இவ்வளபெடையில், அளபெடாவிடினும், அளபெடுப்பினும் பாடலின் யாப்பிலக்கணம் பிழையின்றி அமையும்.)


சொல்லிசை அளபெடை


"குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு."


இக்குறட்பாவில் 'தழி என்றிருப்பினும் செய்யுளின் ஓசை குறைவதில்லை 'தழி' என்பது தழுவுதல் எனப் பொருள் தரும் பெயர்ச் சொல்லாகும் அச்சொல் 'தழீஇ' என அளபெடுத்ததால் தழுவி என வினையெச்சச் சொல்லாயிற்று

இவ்வாறு செய்யுளில் ஓசை குறையாத பொழுதும், பெயர்ச் சொல்லை வினைச்சொல்லாக மாற்றும் பொருட்டு அளபெடுத்தலைச் சொல்லிசை அளபெடை என்பர்

Post a Comment

0 Comments