ஆகுபெயர் வகைகள்
"அவன் தலை மிகச் சிறியது"
"தலைக்கு ஒரு பழம் கொடு"
முதல் தொடரில் உள்ள 'தலை' என்பது உடலின் உறுப்பைக்(சினையை) குறிக்கின்றது. அடுத்த தொடரில் உள்ள தலை என்பது சினையைக் குறிக்காமல், அச்சினைக்கு உரிய மனிதனுக்கு ஆகிவந்தது.
இவ்வாறு ஓர் இடுகுறிப்பெயர், தனக்கு இயல்பான பொருளைக் குறிக்காமல், அதனோடு தொடர்புடைய பிறிதொரு பொருளுக்குத் தொன்றுதொட்டுப் பெயராகி வருவது ஆகுபெயர் எனப்படும்
ஆகு பெயரின் வகைகளாகிய பொருளாகுபெயர், இடவாகுபெயர் காலவாகுபெயர். சினையாகு பெயர், பண்பாகு பெயர், தொழிலாகுபெயர் ஆகியவை.
எண்ணலளவையாகுபெயர்
"நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி"
இத்தொடரில் உள்ள நான்கு, இரண்டு என்றும் சொற்கள் எண்ணிக்கைப் பொருளை உணர்த்தாது. நான்கு அடிகளாலான நாலடியாரையும், இரண்டடிகளாலான திருக்குறளையும் குறிக்கின்றன இவ்வாறு எண்ணலளவைப் பெயர் தொடர்புடைய நூல்களுக்கு ஆகிவருவதால் இஃது 'எண்ணலளவையாகுபெயர்' எனப்படும்
எடுத்தலளவையாகுபெயர்
"பத்துக் கிலோ கொடு"
இத்தொடரில் உள்ள 'கிலோ' என்னும் எடுத்தலளவைப் (நிறுத்தலளவை) பெயர் அதற்குரிய பொருளை உணர்த்துவது அவ்வளவுடைய அரிசிக்கோ பிற பொருள்களுக்கோ ஆகிவந்ததால் இஃது எடுத்தலளவையாகுபெயர் எனப்படும்
முகத்தலளவையாகுபெயர்
"இரண்டு படி (லிட்டர்) ஊற்று"
இதில் படி (லிட்டர்) என்னும் முகத்தலளவைப் பெயர் அவ்வளவைக் குறிக்காமல் அவ்வளவாகிய பால் போன்ற நீர்மப் பொருளுக்கு ஆகி வந்ததால் இது முகத்தலளவையாகுபெயர் ஆயிற்று.
நீட்டலளவையாகுபெயர்
"உடுப்பது நான்கு முழம்"
இத்தொடரில் 'முழம்' என்னும் நீட்டலளவைப் பெயர் உடுப்பது என்னும் குறிப்பால், அவ்வளவைக் கொண்ட ஆடைக்கு ஆகிவந்ததால் நீட்டலளவையாகுபெயர் எனப்படும்
சொல்லாகுபெயர்
"தம்பி என் சொல்லைக் கேட்பான்".
'சொல்' என்னும் பெயர், கேட்பான் என்னும் குறிப்பால் எழுத்துகளாலாகிய சொல்லைக் (வார்த்தையை) குறிக்காது அறிவுரைக்கு ஆகிவந்ததால் சொல்லாகு பெயர் ஆய
தானியாகுபெயர்
"பாலை வண்டியில் ஏற்று"
பால் என்னும் நீர்மப் பொருள் ஏற்றும் என்னும் குறிப்பால், பால் வைக்கப்பட்டிருக்கும் தானமாகிய இடமாகிய) இடத்திற்கு ஆகி வந்து தானியாகு பெயர் ஆயிற்று. (தானம் - குடம், தானி பால்) (தானம் - இடம், தானி - இடத்திலுள்ள பொருள்)
கருவியாகுபெயர்
ஓர் இடப்பெயர், அவ்விடத்திலுள்ள பொருளுக்கு ஆகிவருவத இடவாகுபெயராகும். ஓரிடத்திலுள்ள பொருள் அவ்விடத்திற்கு ஆகிவருவது தானியாகுபெயர்.
"குழல் கேட்டு மகிழ்ந்தேன்"
குழல் என்பது புல்லாங்குழல் என்னும் இசைக்கருவியாகும். இச்சொல் அக்கருவியைக் குறிப்பிடாது அக்கருவியின் காரியமாகிய (செயலாகிய இனிய இசைக்கு ஆகிவந்ததால் இது கருவியாகுபெயர் ஆயிற்று .
காரியவாகுபெயர்
"சக்தி அலங்காரம் கற்றாள்"
அலங்காரம் எனும் காரியத்தின் பெயர், அதற்குக் காரணமாகிய, நூலுக்குப் பெயராகி வந்துள்ளது இவ்வாறு காரியத்தின் பெயர் காரணத்திற்கு ஆகி வருவது காரியவாகுபெயர் எனப்படும்
கருத்தாவாகுபெயர்
"அழகனுக்குத் திருவள்ளுவர் மனப்பாடம்"
திருக்குறளை எழுதிய கருத்தாவின் பெயர் திருவள்ளுவர் என்பதாகும் இத்தொடரில் திருவள்ளுவர் என்னும் பெயர் அவரைக் குறிக்காது அவரால் எழுதப்பட்ட (காரியமாகிய) திருக்குறளுக்கு ஆகிவந்ததால் இது கருத்தாவாகுபெயர் ஆயிற்று. (கர்த்தா - திருவள்ளுவர், காரியம் அவர் எழுதிய திருக்குறள்)
உவமையாகுபெயர்
"பாவை ஆடினாள்"
பாவை எனும் சொல் அழகிய பதுமையைக் குறிக்கும். இப்பெயர், ஆடினாள் என்னும் குறிப்பால், பாவை போன்ற பெண்ணுக்கு ஆகி வந்துள்ளது. எனவே இஃது உவமையாகுபெயர் எனப்படும்
"பொருள்முதல் ஆறோடு அளவை சொல்தானி கருவி காரியம் கருத்தன் ஆதியுள் ஒன்றன் பெயரான் அதற்கியை பிறிதைத் தொன்முறை உரைப்பன ஆகுபெயரே"
0 Comments